கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய ரூ.11 கோடி மதிப்பிலான வாட்ச்
செய்தி முன்னோட்டம்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது 'GOAT இந்தியா டூர் 2025' பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' (Vantara) வனவிலங்கு மையத்திற்கு சென்றார். இந்த சந்திப்பின் போது, ஆனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு மிக அரிய வகை வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ளார். ரிச்சர்ட் மில்லே (Richard Mille RM 003-V2 GMT Tourbillon - 'ஆசியா எடிஷன்') பிராண்டட் வாட்ச் அது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 10.9 கோடி முதல் 11 கோடி (1.2 மில்லியன் டாலர்) என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட மாடல் உலகில் வெறும் 12 தான் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
தொழில்நுட்பம்
அரிய வகை வாட்சின் தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்
இதில் 'டூர்பில்லான்' (Tourbillon) இயக்கம் மற்றும் இரண்டு நாடுகளின் நேரத்தைக் காட்டும் 'ஜிஎம்டி' (GMT) வசதி உள்ளது. விண்வெளி மற்றும் ஃபார்முலா 1 பந்தயங்களில் பயன்படுத்தப்படும், கார்பன் TPT (தின் பிளை டெக்னாலஜி) ஆல் செய்யப்பட்ட 38 மிமீ முத்தரப்பு கேஸை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தில் மணிநேரங்கள், நிமிடங்கள், இரட்டை நேர மண்டல காட்டி, ஒரு ஃபங்க்ஷன் செலெக்டர், பவர் ரெசெர்வ் மற்றும் டார்க் இண்டிகேட்டர்கள் உள்ளது. அதோடு, கருப்பு கார்பன் கேஸ், ஒரு skeleton டயல் மற்றும் டைட்டானியம் பேஸ்பிளேட் ஆகியவை உள்ளன. மேலும், டூர்பில்லன் இயக்கம் கடிகாரத்தின் துல்லியத்தில் ஈர்ப்பு விசையின் விளைவுகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள்
வாட்சை வைத்திருக்கும் பிற பிரபலங்கள்
இந்த மிகவும் அரிதான, வரையறுக்கப்பட்ட டைம்பீஸை வைத்திருப்பதாக அறியப்பட்ட பல ஆளுமைகளில் புருனே சுல்தான் ஹசனல் போல்கியா, ஃபார்முலா 1 ஓட்டுநர் மிக் ஷூமேக்கர், முன்னாள் FIA தலைவரும் ஃபெராரி அணியின் முதல்வருமான ஜீன் டோட், ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிம் மற்றும் புகழ்பெற்ற வாட்ச்மேக்கர் கரி வௌட்டிலைனென் ஆகியோர் அடங்குவர்.
வந்தாரா
வந்தாரா மையத்தில் மெஸ்ஸி
மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோர் வந்தாரா மையத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்றனர் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, மலர் தூவி பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்ஸி அங்கிருந்த யானைக் குட்டி ஒன்றுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். "வந்தாரா செய்யும் விலங்கு பாதுகாப்புப் பணிகள் மிகவும் அழகானது மற்றும் வியக்கத்தக்கது" என்று மெஸ்ஸி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னதாக மெஸ்ஸி டெல்லி மற்றும் மும்பையில் சச்சின் டெண்டுல்கர், சுனில் செத்ரி போன்ற பிரபலங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.