மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன?
'கோமாளி' படத்தின் டைட்டில் கார்டு பார்த்து, எத்தனை பேர் ஏக்கபெருமூச்சு விட்டீர்கள்? எத்தனை பேருக்கு அது ஓர் பொற்காலமாக தோன்றுகிறது? ஆம், 90களின் தொடக்கத்தில் பள்ளிக்கு சென்றவர்கள் அனைவருமே இதை ஆமோதிப்பர். அம்மா, அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி, 10பைசா, 50பைசா என பாக்கெட் மணி வாங்கி கொண்டு, பள்ளி அருகே இருக்கும் பொட்டி கடையில், கமர்கட்டு, கோகோ முட்டாய், தேங்கா பர்பி என அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பாட்டிலை 'ஆ...' என வாய் பிளந்து பார்த்துக்கொண்டு, இருக்கும் பாக்கெட் மணியில், கிடைக்கும் பொருளை, சாப்பிட்டு கொண்டே, நண்பர்களோடு நடைபோட்ட காலம் போல வருமா? அந்த காலத்து தின்பண்டங்களை, இப்போது எங்கே போய் தேடுவது என ஏங்குபவர்களுக்கு ஒரு இனிய செய்தி!
90ஸ் கிட்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்!
பாளையம்கோட்டை கோபாலசாமி கோவில் அருகே, கிருஷ்ணன் என்பவர் ஒரு பெட்டி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் 80களின் மிட்டாய்கள் மட்டுமல்ல, சில அரிய விளையாட்டு சாமான்களும் விற்கப்படுகின்றன. இந்த கடையை தேடி 90களின் குட்டீஸ் மட்டுமல்ல, அவர்களின் குட்டிஸ்களும் கூட்டம்கூட்டமாக வருகின்றனர். அவர்களுக்கும் அந்த காலத்து மிட்டாய்களின் சுவை பிடித்திருக்கிறதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி விலையும் மிகவும் குறைவாக இருப்பதே இதன் ஸ்பெஷல். இதே போன்று, 'சென்னை அங்காடி' என்ற கடையை 2018இல் பாஸ்கர் என்பவர் துவக்கினார். நன்றாக பிரபலம் அடைந்து வந்த அந்த வேளையில், லாக்டவுன் காலத்தில் மூடப்படவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது என அதன் நிறுவனர் கூறுகிறார். தற்போது, இன்ஸ்டாகிராம் மூலம் வியாபாரம் செய்து வருவதாக கூறுகிறார், அதன் நிறுவனர் பாஸ்கர்.