தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
நிதி மேலாண்மை என்று வரும்போது முதலில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மருத்துவச் செலவுகள் தான். மற்ற செலவுகளை நாம் முன்கூட்டியே திட்டமிடவோ அல்லது திடீரென வரும் போது தள்ளி வைக்கவோ முடியும். ஆனால், மருத்துவச் செலவுகள் அப்படியானவை அல்ல. இன்று உலக கல்லீரல் தினம். இந்தியாவில் 10 லட்சம் பேர் கல்லீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது அறிக்கை ஒன்று. இது போன்ற தீவிரமான நோய்களுக்கு என்ன விதமான மருத்துவக் காப்பீடு செய்வது என்பது குறித்து பார்க்கலாம். பொதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு மேற்கூறிய கல்லீரல் நோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு நாம் சிகிச்சை மேற்கொள்ள முடியாது. அதற்கென தனியாக தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன.
தீவிர நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள்:
பொதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் திடீரென நமக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கான சிகிச்சையை நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், சிறிய அளவிலான தொகை மட்டுமே இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்களில் வழங்கப்படும். தீவிர நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் தனியாக இருக்கின்ற. பொதுவான காப்பீட்டுத் திட்டத்துடன் சேர்த்து தீவிர நோய் காப்பீட்டுத் திட்டத்தையும் நாம் சேர்த்து எடுத்துக் கொள்வது சிறந்தது. இதில் அதிகப்படியான தொகைக்கு காப்பீடு செய்யப்படுவதால், தீவிர நோய்க்காக நாம் சிகிச்சை எடுக்கும் சமயத்தில் நம்முடைய தினசரி செலவுகளையும் சேர்த்து இந்தத் திட்டத்தின் மூலம் நம்மால் சமாளிக்க முடியும். சிகிச்சைக்கான செலவுகள், வீட்டுச் செலவுகள், நம்முடைய மாத EMI-கள் என அனைத்தும் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நமக்கு வழங்கப்படும்.