சமூக ஊடகங்களில் 30 நிமிடத்திற்கு மேல் செலவிடும் குழந்தைகளுக்கு கவனச் சிதறல் அதிகரிக்கும்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
சமூக ஊடகத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் நேரம் செலவிடும் குழந்தைகள், படிப்படியாகக் கவனம் சிதறும் அறிகுறிகளை எதிர்கொள்வதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சுவீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 9 முதல் 14 வயதுடைய 8,000க்கும் அதிகமான குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், தொலைக்காட்சிகள் பார்ப்பது அல்லது வீடியோ கேம்கள் விளையாடுவது போன்றவற்றுடன் கவனச்சிதறல் அறிகுறிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், சமூக ஊடகப் பயன்பாடு மட்டுமே இந்தக் குறைபாட்டிற்குப் பங்களிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நேரம்
குழந்தைகள் சமூக ஊடகங்களில் செலவிடும் சராசரி நேரம்
குழந்தைகள் சமூக ஊடகங்களில் செலவிடும் சராசரி நேரம், 9 வயதுள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்களாகவும், 13 வயதுடையவர்களுக்கு 2.5 மணிநேரமாகவும் அதிகரித்துள்ளது. இதில் பல தளங்களில் குறைந்தபட்ச வயது வரம்பு 13 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த நிலை காணப்படுகிறது. "குழந்தைகளின் கவனக்குவிப்பில் சமூக ஊடகங்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது." என்று கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டோர்கெல் கிளிங்பெர்க் தெரிவித்தார்.
விளக்கம்
கவனச் சிதறல் குறித்து விளக்கம்
சமூக ஊடகங்கள், செய்திகள் மற்றும் அறிவிப்புகள் வடிவில் தொடர்ந்து குறுக்கீடுகளை ஏற்படுத்துவதாகவும், ஒரு செய்தி வந்துள்ளதா என்ற சாதாரண எண்ணம் கூட ஒருவித மனக் கவனச்சிதறலாகச் செயல்படுவதாகவும் அவர் விளக்கினார். இது ஒருவரின் கவனத்தைத் தக்கவைக்கும் திறனைப் பாதிக்கிறது. சமூக-பொருளாதாரப் பின்னணி அல்லது ADHDக்கான மரபணுக் குறைபாடு போன்ற எந்தக் காரணிகளும் இந்த ஆய்வு முடிவை பாதிக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தனிப்பட்ட அளவில் இந்த விளைவு சிறியதாக இருந்தாலும், மக்கள் தொகையின் அளவில் இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.