மிசோரம் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?
40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டமன்றத்திற்கான வாக்கு பதிவு கடந்த நவம்பர் 7 அன்று நடைபெற்றது. இதற்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவின் மிசோ தேசிய முன்னணி(MNF) கட்சி வெற்றி பெறுமா அல்லது வேறு கட்சிகள் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்வி குறியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின் படி, மிசோரத்தில் தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி(MNF), ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM), காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய நான்கு முக்கிய போட்டியாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின்படி, MNF மற்றும் ZPM ஆகிய கட்சிகள் தலா 10 இடங்களில் முன்னிலையில் இருந்தன.
புதிய போட்டியாளரான ZPM முன்னிலை
காலை 9 மணி நிலவரப்படி, மிசோ தேசிய முன்னணியின்(MNF) புதிய போட்டியாளரான ZPM 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி(MNF) 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அது போக, காங்கிரஸ் 6 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. இந்த தேர்தலின் போது, MNF, ZPM மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 40 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் போட்டியிட்டது. மேலும், 17 சுயேச்சை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ள்னர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், MNF- 26 இடங்களிலும், ZPM- 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.