லடாக்கில் பயங்கர பனிச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு; மீட்புப்பணிகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
லடாக்கின் மிக முக்கியமான மலைப்பாதையான சோஜிலா கணவாயில் (Zojila Pass) இன்று (மார்ச் 27, 2026) ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீநகரில் இருந்து கார்கில் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஜீரோ பாயிண்ட் அருகே இந்த விபத்தில் சிக்கின. வெள்ளிக்கிழமை மதியம் சோஜிலா கணவாய் பகுதியில் எதிர்பாராத விதமாகப் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த வழியாகச் சென்ற 5 வாகனங்கள் தடிமனான பனி அடுக்குக்கு அடியில் சிக்கின. ஒரு பயணிகள் வாகனம் உட்பட பல வாகனங்கள் பனியில் முழுமையாகப் புதைந்தன.
உயிர்ச்சேதம்
உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள்
காவல்துறை அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இன்னும் பனிக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுவதால், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. காந்தர்பால் போலீஸார், பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு ஆகியவை இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கனரக இயந்திரங்கள் மூலம் பனிப்பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
உத்தரவு
லெப்டினன்ட் கவர்னர் உத்தரவு
இந்தச் சம்பவம் குறித்து லடாக் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "சோஜிலா கணவாயில் பனிச்சரிவு ஏற்பட்ட செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கார்கில் கலெக்டர் மற்றும் எஸ்எஸ்பி ஆகியோரை உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளேன். பிஆர்ஓ மற்றும் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. நிலைமையை நான் நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார். பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.