மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரான கவுஷல் கிஷோருக்கு சொந்தமான வீடு ஒன்று உத்தரப்பிரதேசம், லக்னோவில் அமைந்துள்ளது. இந்த அமைச்சருக்கு விகாஸ் என்னும் மகன் உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வினய்சீனிவாசன் என்னும் இளைஞர் இன்று(செப்.,1)அதிகாலை லக்னோ வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இறந்து கிடந்த இளைஞரின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பலத்தக்காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மத்திய அமைச்சரின் மகனான விகாஸுக்கு இறந்துக்கிடந்த இளைஞர் வினய்சீனிவாசன் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் அமைச்சர் மகனின் நண்பர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை
மேலும் அங்கு விகாஸ் கிஷோருக்கு சொந்தமான உரிமம் பெற்ற துப்பாக்கி கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்றிரவு 6 பேர் ஒன்றாக அமைர்ந்து உணவு அருந்தியுள்ளதாகவும், அதன் பின்னர் தான் இந்த கொலை நடந்துள்ளது என்னும் தகவலும் விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆனால் இச்சம்பவம் நடந்தபொழுது தனது மகன் அங்கில்லை, டெல்லியில் இருந்தார் என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையில் மரணமடைந்த வினய் சீனிவாசனின் சகோதரர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு புகார் அளித்துள்ளாராம். அதன் பேரில் தற்போது காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விகாஸ் நண்பர்கள் மூவரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விகாஸின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.