'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி
டெல்லியில் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் காரணமாக தொடர்ந்து அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட்.,8) மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று(ஆகஸ்ட்.,9) ராகுல் காந்தி பேசுகையில்,"நான் மணிப்பூருக்கு சென்றுவந்தேன். ஆனால் பிரதமர் மோடி ஏன் இன்னும் செல்லவில்லை?. மணிப்பூர் இந்தியாவில் இல்லை என்று மத்திய அரசு நினைத்து கொண்டிருக்கிறது. மணிப்பூரை மத்திய அரசு இரண்டாக பிரித்து வைத்துள்ளது. அங்கு நடந்த வன்முறையால் இந்தியாவையே குற்றவாளியாக்கி விட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.
தகுதிக்கு மட்டுமே இந்தியாவில் இடமுண்டு - ஸ்மிருதி இராணி
மேலும் அவர்,"நீங்கள் பாரத மக்களை காப்பவர்கள் அல்ல, பாரத மாதா மற்றும் தேசத்தினை மணிப்பூர் வன்முறையில் கொன்று விட்டீர்கள்" என்று கடுமையாக பேசியுள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி பேச்சுக்கு ஆவேசத்துடன் எதிர்ப்புத்தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, "மணிப்பூர் இந்தியாவுடன் தான் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஊழலை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேறவேண்டும்" என்றும், "நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா ஊழல் இல்லாத நாடு. இந்தியா நம்புவது திறமையைத்தானே தவிர, குடும்பவாரிசு முறையினை அல்ல" என்றும் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் பிரிட்டிஷிற்கு கூறியதை தற்போது நினைவில் வையுங்கள். ஊழல் மற்றும் குடும்ப அரசியல் இல்லாத நாடு இந்தியா, தகுதிக்கு மட்டுமே இந்தியாவில் இடமுண்டு என்று ஆவேசமாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.