மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம்
யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, புது டெல்லி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய கட்டத்தினை எட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. நேற்று(ஆகஸ்ட்.,15) மாலை 6 மணி நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம் 205.39 மீட்டராக அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புதுடெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வழிந்தோடுகிறது என்றும் கூறப்படுகிறது. அங்கு அமைந்துள்ள ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்
இதனால் தலைநகர் டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த ஜூலை மாதம் பெய்த தென் மேற்கு பருவ மழை காரணமாக யமுனை நதி நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு 208.66 மீட்டரை எட்டியது. இதனால் இதன் நீர் பிடிப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கியதால் இதன் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 1978 செப்டம்பர் மாதத்தில் 207.49 என்னும் அளவே இதுவரை அதிகப்பட்ச உயரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.