
இந்தியா - சீனா உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அடித்தளமிட்டது ஜி ஜின்பிங்கின் இந்த கடிதம்தானா?
செய்தி முன்னோட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய ரகசியக் கடிதம், சீனா-இந்தியா உறவுகளில் அமைதியான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கப் போவதாகச் சிக்னல் கொடுத்த நேரத்தில், கடந்த மார்ச் மாதம் இந்த ரகசியக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த ரகசியக் கடிதம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. அமெரிக்க வர்த்தக அழுத்தம் இரு நாடுகளிலும் அதிகரித்திருந்த நிலையில், உறவுகளை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்காகவே சீன அதிபர் ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு விஷயங்களில் ஒரு பரந்த உடன்பாட்டிற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ராஜதந்திர அணுகுமுறையின் விளைவாக, 2020 ஆம் ஆண்டில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு இரு நாடுகளும் சமீபத்தில் ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடியின் சீனப் பயணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது ஆசியாவின் மூலோபாய சமநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஆக்ரோஷமான வர்த்தகக் கொள்கைகளின் எதிர்பாராத விளைவாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.