உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர்
கடந்த 2019ம்ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவ துவங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதன்பேரில் உலகில் முதன்முறையாக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழி செலுத்தப்படும் நாசல் தடுப்பூசியான இன்கோவேக் மருந்துக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இந்நிலையில் இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவன செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறுகையில், 'இந்த இன்கோவேக் எடுத்து கொள்ள எளிதானது. எவ்வித வலியும் இல்லாதது. இதனை எடுத்துக்கொண்டால் 3 வகையான நோயெதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதன் விநியோகம் இந்தியாவில் துவங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் இதற்கான விலை ரூ.800என்றும், அரசு மருத்துவமனையில் ரூ.325ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உபயோகப்படுத்தினால் உலகில் உள்ள மற்ற நாடுகளும் உபயோகப்படுத்தும்-டாக்டர் கிருஷ்ண எல்லா
மேலும், இந்த மருந்தினை இந்தியாவில் உபயோகப்படுத்தினால் உலகில் உள்ள மற்ற நாடுகளும் உபயோகப்படுத்த துவங்கிவிடும் என்றும் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறியுள்ளார். எல்லா பவுண்டேஷன் மற்றும் யூ.டபிள்.யூ-மேடிசன் குளோபல் சுகாதார மையம் இடையேயான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த இன்கோவேக் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்த செயல்பாட்டில் இந்தியாவில் நவீன தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் சர்வேதேச சுகாதார கல்வி ஆகியவை முதன்முறையாக நிறுவப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை செலுத்த தனியாக ஊசிகளோ, ஆல்கஹால் துடைப்பான்களோ, கட்டு போடும் துணிகளோ தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மருந்தின் மூலம் கொள்முதல், விநியோகம், சேமித்து வைத்தல் போன்ற செலவுகள் மிச்சப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.