Page Loader
டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா(H2N3) மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா

எழுதியவர் Sindhuja SM
Mar 24, 2023
10:08 am

செய்தி முன்னோட்டம்

உலக வங்கியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அஜய் பங்கா டெல்லி வந்திருக்கும் நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது வழக்கமான சோதனையின் போது கண்டறியப்பட்டதாக கருவூலத் துறை நேற்று(மார் 23) தெரிவித்துள்ளது. அஜய் பங்கா, அவரது உலக சுற்றுப்பயணத்தை முடிப்பதற்காக டெல்லி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா(H2N3) மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 140 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1300ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா

அஜய் பங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்: கருவூலத் துறை

மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் டெல்லி வந்து, பிரதமர் மோடி, எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க இருந்த அஜய் பங்காவின் "உலகளாவிய கேட்பு சுற்றுப்பயணம்" இந்திய பயணத்துடன் முடிவடைகிறது. "வழக்கமான சோதனையின் போது, ​​அஜய் பங்காவுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. உள்ளூர் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்" என்று கருவூலத் துறை வியாழன் மதியம் தெரிவித்தது. புது டெல்லியில் 84 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.