தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக வங்கி முதன்மை விவசாய நிபுணர் ஆண்ட்ரூ குட்லேண்ட்(63) தன் தாத்தாவின் நினைவைத் தேடி குன்னூர் வந்தார். முதலாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பணியாற்றியவர் இவரது தாத்தா ஸ்டேன்லி குட்லேண்ட். இவர் 1915ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டைபாய்டு காரணமாகக் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நோய் குணமான பின்னும் பல நாட்கள் வெலிங்டனில் தங்கி இருந்த இவர், தன் அனுபவங்களைக் கடிதமாக எழுதி இருக்கிறார்.
நினைவுகளுடன் ஒரு பயணம்!
அவரது கடிதங்களை இங்கிலாந்து அரசு புத்தகமாக வெளியிட்டு இருக்கிறதாம். அந்த கடிதங்களில் தன் தாத்தா வெலிங்டன் மிகவும் சிறப்பாக இருந்தது என்று எழுதி இருந்ததால், தன் தாத்தாவின் நினைவுகள் சுமந்த இடத்தை தானும் பார்வையிட வந்துள்ளார் பேரன் ஆண்ட்ரூ குட்லேண்ட். அவரது தாத்தா விரும்பி சென்ற இடங்களான வெலிங்டன் ராணுவ மருத்துவமனையின் அருகே இருக்கும் கோல்ப் மைதானம், ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட இடங்களைத் தன் நண்பர் கிறிஸ்டோபருடன் சென்று அவர் ரசித்து பார்த்தார். 100 ஆண்டுகளுக்குப் பின் இறந்து போன தன் தாத்தாவின் நினைவுகளைத் தேடும் ஒரு பேரனின் பயணத்தைக் கேட்கும் போது நம் மனம் நெகிழ்கிறது. நமக்கு தெரியாமலேயே இன்னும் எத்தனை 'மதராசபட்டினம்' கதைகள் நம் மத்தியில் இருக்கிறதோ தெரியவில்லை.