மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன்பு நாளை(மார் 11) ஆஜராக இருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நிறைவேற்றக் கோரி இன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஜந்தர் மந்தரில் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மோடி அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"27 ஆண்டுகளுக்குப் பிறகும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. 33% பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உண்மையாவதை நாம் உறுதி செய்வோம்." என்று கவிதா ட்விட்டரில் கூறியுள்ளார்.
இந்தியா
போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்
இந்த போராட்டத்தில் ஷியாம் ரஜக் (RJD), சீமா சுக்லா (SP), என்சிபி செய்தித் தொடர்பாளர், தெலுங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், ஆந்திராவை சேர்ந்த பெண் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சஞ்சய் சிங் மற்றும் சித்ரா சர்வாரா(AAP), நரேஷ் குஜ்ரால்(அகாலி தளம்), அஞ்சும் ஜாவேத் மிர்சா(PDP), ஷமி பிர்தௌஸ (NC), சுஷ்மிதா தேவ்(TMC), கே.சி. தியாகி(JDU), சீமா மாலிக்(NCP), நாராயண கே( CPI), ஷியாம் ரஜக்(RLD), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா) மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஆகியோர் மாலை 4 மணிக்கு முடிவடையும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.