மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம்
வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்த வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவே இதற்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது. ஒரே நாளில் மக்கள் டோக்கன் வாங்க வர வேண்டாம். அடுத்தடுத்து முகாம்கள் இதற்காக நிச்சயம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வரும் 17ம்தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் ஒரு அலுவலர் நியமனம்
மேலும், 10 லட்சம் விண்ணப்பங்கள் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் ஒரு அலுவலர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவுவதற்கு இருப்பார் என்றும், கைரேகை பதிவிற்கு பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு நியாயவிலைக்கடைகளிலும் வைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பெண்களுக்கு வங்கிக்கணக்கு இல்லையெனில், கூட்டுறவு வங்கிகளில் அவர்களுக்கு புதிதாக கணக்கு துவக்கித்தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாக தன்னார்வலர்கள் மூலம் இதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ள நிலையில், குடும்ப தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு அமைக்கப்படும் சிறப்பு முகாம்கள் ஒரு பகுதியில் 2 இடங்களில் அமைக்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது. சென்னையிலுள்ள 1,417 நியாயவிலைக்கடைகளில், 3,550 முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.