ஏன் இந்த நேரத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது? மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம்
செய்தி முன்னோட்டம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அரசின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQs) தொகுப்பை வெளியிட்டுள்ளது. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த அரசு கொண்டு வந்த இந்த மசோதா, ஏன் இந்தத் தருணத்தில் முக்கியமானது என்பதை இந்தத் தொகுப்பு விளக்குகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
நோக்கம்
மசோதாவின் அவசியம் மற்றும் நோக்கம்
ஏப்ரல் 16, 2026 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்த) மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2029 தேர்தலிலேயே உறுதி செய்ய நோக்கம் கொண்டிருந்தன. 2026க்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை வரை காத்திருந்தால், பெண்களுக்கான பலன் கிடைக்கக் காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த மசோதாக்கள் அவசியமாகக் கருதப்பட்டன.
தொகுதிகள் எண்ணிக்கை
மக்களவை இடங்களை அதிகரிப்பதற்கான தேவை
1971ல் 54 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை, தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. மக்களுக்கான சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, தற்போது 543 ஆக உள்ள மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 50 சதவீதம் சீராக உயர்த்துவதன் மூலம், மாநிலங்களுக்கிடையிலான சமநிலை பாதுகாக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
மாநிலங்கள்
மாநிலங்கள் மற்றும் சமூகங்களுக்குப் பாதிப்பா?
தென் மாநிலங்கள்: தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக, அவர்களின் இடங்களின் பங்கு தற்போதைய 23.76 சதவீதத்திலிருந்து 23.87 சதவீதமாகச் சற்று உயரும். எஸ்சி/எஸ்டி பிரிவினர்: இந்த மசோதா மூலம் இடங்கள் உயரும்போது, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, அவர்களின் பிரதிநிதித்துவம் வலுப்படும். மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: அரசியலமைப்பின்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இடமில்லை என்பதால், இது சமூக மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
மற்றவை
பிற முக்கிய விளக்கங்கள்
தேர்தல் பாதிப்பு: தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2029 வரை தற்போதைய முறையிலேயே தேர்தல்கள் நடைபெறும் என்பதால், நடைபெற்று வரும் மாநிலத் தேர்தல்களில் எந்த பாதிப்பும் இருக்காது. சாதிவாரி கணக்கெடுப்பு: இந்த மசோதா சாதிவாரி கணக்கெடுப்பைத் தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்றும், அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. யூனியன் பிரதேசங்கள்: டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களின் தனித்துவமான சட்ட விதிகள் காரணமாக, அவற்றுக்கு எனத் தனியாக மசோதா தேவைப்பட்டது. இந்த மசோதாக்கள் சட்டமாகியிருந்தால், வரும் 2029 தேர்தலிலேயே இந்திய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை அது ஏற்படுத்தியிருக்கும்.