2023 ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா? - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வரவிருக்கும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டமிட்டபடி நிச்சயம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. வருடா வருடம் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும், மேலும் பல தென்மாவட்டங்களிளும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரபலமானது. இதனை காண வெளிநாட்டினர் வந்த செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த விளையாட்டின் போது காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா உள்ளிட்ட சில அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர்.
தமிழக அரசு தரப்பில் இருந்து கால்நடை பராமரிப்புதுறை தகவல்
இது குறித்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்ததையடுத்து, தமிழக அரசு தரப்பில் இருந்து கால்நடை பராமரிப்புதுறை தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி வரும் 2023ம் ஆண்டு நடத்தப்படும்" என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.