வாக்கு உங்கள் உரிமை! ஜனவரி 25 ஏன் தேசிய வாக்காளர் தினமானது? தேர்தல் ஆணையத்தின் வரலாற்று பின்னணி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதிதான் இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது, இந்தியா குடியரசு நாடாக மாறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பே தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்கும், குறிப்பாக இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்கும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது இதன் முதன்மை நோக்கமாகும்.
வரலாறு
வரலாற்றுப் பயணம்
2011 ஆம் ஆண்டுதான் முதல்முறையாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது. இன்று (ஜனவரி 25, 2026) நாடு முழுவதும் 16 வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் வாக்களிக்க 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 61 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இது 18 ஆகக் குறைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தின் அடிப்படையில் இந்தத் தினம் கொண்டாடப்படும். அதன்படி 2026 இன் கருப்பொருள் "எனது இந்தியா, எனது வாக்கு" ஆகும். தாரக மந்திரம் "இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் மக்கள்" என்பதாகும்.