நகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை
இந்திய நகரங்களில் வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 53% பேர் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்பது புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ராகுல்-கோயல், டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(ஐஐடி) ட்ரான்ஸ்போர்ட்டேஷன் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் பாலின சமத்துவமின்மை தினசரி இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிய, இந்தியாவின் முதல் நேர பயன்பாட்டுக் கணக்கெடுப்பின்(Time Use Survey) தரவை ஆராய்ந்துள்ளார். இந்த கணக்கெடுப்பு 2019ஆம் ஆண்டு இந்திய நகரங்களில் எடுக்கப்பட்டவையாகும். நகரங்களில் வசிக்கும் 170,000 பேரின் தரவுத்தொகுப்பை கோயல் ஆய்வு செய்துள்ளார். இந்த கணக்கெடுப்பின்படி, பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், அதாவத 53% பெண்கள் கணக்கெடுப்பிற்கு முந்தைய நாள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளனர்.
பழமைவாத சமூக நெறிமுறைகளால் பெண்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது: கோயல்
இது ஆண்களின் சதவீதத்தை(14%) ஒப்பிடும் போது மிகவும் அதிகம். பெண்கள் தங்கள் இளமைப் பருவத்தில்(10 முதல் 19 வயது வரை) இருக்கும் போது வெளியே செல்வது ஆண்கள் வெளியே செல்வதைவிட மிகவும் குறைவாக இருக்கிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பெண்கள் நடுத்தர வயதை அடையும் போது அவர்களது "இயக்கத்தில் சிறிது அதிகரிப்பு" இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 25-44 வயதுடைய பெண்கள், ஒவ்வொரு நாளும் சராசரியாக எட்டரை மணிநேரம் வீட்டு வேலை அல்லது பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே தான் இதில் ஈடுபடுகின்றனர். இந்த வயதுடைய ஆண்கள் 12% பேரும் பெண்கள் 62% பேரும் வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை என்று கூறியுள்ளனர்.