வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள்
தமிழ்நாடு மாநிலம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை(மே.,2) வானில் ஒரு வெண்புகை வட்டம் தோன்றி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வானில் ஒரு வெண்புகை வட்டம் தெரிந்துள்ளது. முதலில் சிறியதாக இருந்த இந்த வட்டமானது, நேரம் போக போக பெரியதாக மாறியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் மிக வியப்புடன் பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் தங்கள் கைபேசியில் புகைப்படமாகவும் அதனை பதிவு செய்து கொண்டனர். ஒரு பக்கம் இதனை வேடிக்கையாக மக்கள் பார்வையிட்டாலும் மறுபக்கம் அவர்கள் மனதில் இது என்ன என்னும் கேள்வியும், அச்சமும் எழ துவங்கியது.
அறிவியல் நிபுணர்கள் விளக்கம்
வானில் திடீரென தோன்றிய இந்த வட்டத்தினை கண்டு சிலர் இது வேற்றுகிரக வாசிகள் வந்து சென்றதற்கான தடையமாகவும் இருக்கலாம் என்று கூறினர். இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், பாங்காங்கிலிருந்து பெங்களூரு சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்று மழை காரணமாக தனது பாதையில் சரியாக செல்ல முடியாமல் வேலூர் மாவட்டத்தின் மீது 4 சுற்று வட்டமடித்துவிட்டு பின்னர் பெங்களூருக்கு 18 நிமிடங்கள் தாமதமாக சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வேலூர் அறிவியல் மைய நிபுணர்கள் கூறுகையில், வானில் ஏற்பட்ட வெண்புகை வட்டம் விமானம் வட்டமடித்து சென்றதால் ஏற்பட்டது தான் என்று விளக்கம் அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.