ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்தியாவில் இதுவரை சில்லறை வணிகக் கடைகளே இல்லாமல், ஆன்லைன் மற்றும் மூன்றாம் தர சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே இயங்கி வந்த ஆப்பிள் நிறுவனம் இன்று மும்பையில் தங்கள் முதல் சில்லறை வணிகக்கடைத் திறப்பின் மூலம் கோலாகலமாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆப்பிள் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஒரு தனித்துவத்தை புகுத்தியிருக்கும். மற்றவர்களிடம் தனித்துத் தெரிவிது தானே ஆப்பிளின் தனித்துவம். மும்பை BKC ஸ்டோரில் என்ன தனித்துவத்தைப் புகுத்தியிருக்கிறது ஆப்பிள்? ஆப்பிளின் புதிய ஸ்டோரின் மேல்புறமானது 1,000 முக்கோன வடிவ டைல்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு டைலும் 408 மரத்துண்டுகளைச் சேர்த்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு ஸ்டோரின் கண்ணாடிச் சுவர்களை தாண்டி வெளியேயும் நீண்டு, சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது.
தனித்துவமான டிசைன் மற்றும் வசதிகள்:
ஸ்டோரின் உள்ளே நுழைந்ததும் இரண்டு கற்சுவர்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கும். இதற்கான கற்கள் ராஜஸ்தானில் இருந்து பிரத்தியேகமாக வரவழைத்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டோரானது 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தனியாக சூரிய மின் சக்தியை சேகரிக்கும் வகையில் சூரிய மின் தகடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகமெங்கும் இருக்கும் வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையிலும், அவர்களுக்கு சேவை வழங்கும் வகையிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களை இந்த ஸ்டோரில் பணியில் அமர்த்தியிருக்கிறது ஆப்பிள். இவர்கள் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் உரையாடி ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கவிருக்கிறார்கள். இந்த மும்பை ஸ்டோரைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழைமை டெல்லியில் உள்ள ஸ்டோரை திறக்கவிருக்கிறது ஆப்பிள்.