சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம்
கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா.,கட்சியின் எம்.பி.மனோஜ் ஜா, மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயம் என்பதில் ஆளும்கட்சியின் நிலைக்கப்பாட்டினை அறிய விரும்புவதாக கூறினார். அவரின் இந்த கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி பதிலளித்தார். அதன்படி அவர், 'அதிகளவிலான வருவாய் ஈட்ட வேண்டும் என்று விரும்பும் பெண்களின் சமத்துவ வாய்ப்பினை இந்த மாதவிடாய் விடுமுறை மறுக்கிறது' என்று கூறினார். தொடர்ந்து அவர், 'பெண்களின் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் இந்த இயற்கையான மாதவிடாய் அல்லது மாதவிடாய் சுழற்சி அவர்களுக்கான இடர்பாடு அல்ல' என்றும், 'எனவே பெண்களுக்கு இதன் காரணமாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை' என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
நாடு முழுவதும் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையினை கிளப்பியது
இவரின் இந்த பதிலடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அனைத்து தரப்பு பெண்களும் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த பதிலுக்கு எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். நாடு முழுவதும் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்மிருதி இரானி இந்த விவகாரம் குறித்த தன்னுடைய விளக்கத்தினை அண்மையில் அளித்துள்ளார். அதில் அவர், 'நான் நாடாளுமன்றம் கூட்டத்தில் பேசிய பொழுது எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசினேன்' என்று கூறினார். மேலும் அவர், 'ஏன் அவ்வாறு கூறினேன் என்றால், பணி மேற்கொள்ளும் இடத்தில் பெண்கள் பாகுபாடுகள் மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்வதினை நான் விரும்பவில்லை. ஆனால் இந்த கேள்வி அதிர்ச்சியினை தூண்டும் வகையில், கவனத்தினை ஈர்க்கும் நோக்கில் அமைந்திருந்தது' என்று தெரிவித்துள்ளார்.