வாச்சாத்தி மலைக்கிராமத்தில் உண்மையில் என்ன நடந்தது?
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 1992ம் ஆண்டு வாச்சாத்தி மலைக்கிராமத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம். வாச்சாத்தி என்பது தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஹரூரில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பழங்குடியின கிராமமாகும். 1992ஆம் ஆண்டில், அந்த குக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 655ஆக இருந்தது. அதில் 643 பேர் மலையாளி பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் மட்டுமே பிற சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
வாச்சாத்தி மக்களும் அவர்களது வாழ்வாதாரமும்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 120 குழு வீடுகள் உட்பட சுமார் 200 வீடுகள் அந்த கிராமத்தில் அப்போது இருந்தன. மேலும், 645.39 ஏக்கர் விவசாய நிலமும் அந்த கிராமத்தில் இருந்தது. அந்த கிராமத்தில் இருந்த சுமார் 190 பேர் சொந்த விவசாய நிலங்களை வைத்திருந்தனர். மீதமுள்ள 466 பேர் நிலமற்ற தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். அந்த கிராமம் சித்தேரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. தொம்பக்கல் காப்புக்காடு மற்றும் பள்ளிப்பட்டி காப்புக்காடு ஆகியவை அதை ஒட்டி அமைந்திருந்தன. விவசாயம் அந்த கிராம மக்களின் முக்கிய தொழிலாக இருந்தாலும், அவர்கள் சிறு வனப் பொருட்களையும், காடுகளிலிருந்து விறகுகளையும் சேகரித்து தங்கள் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தனர்.
சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக எழுந்த புகார்
சிலர் அன்றாடக் கூலி விவசாயத் தொழிலாளர்களாகப் பணியாற்றுவதற்கு அருகிலுள்ள கிராமங்களுக்கும் சென்றனர். சிலர் கிராமத்தில் இருக்கும் நிலத்தில், ராகி, மரவள்ளிக்கிழங்கு, அரிசி மற்றும் பிற தானியங்களை முக்கியமாக பயிரிட்டு பிழைத்து வந்தனர். இதற்கிடையில், சித்தேரி மலையில் உள்ள காப்புக்காடுகளில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளதால், அப்பகுதியில் அதிக அளவில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. அந்த மலையின் அடிவாரத்தில் வாச்சாத்தி அமைந்திருந்ததால், சித்தேரி மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சந்தன மரங்களை கொண்டு செல்வதற்கான தொடக்கப் புள்ளியாக வாச்சாத்தி கருதப்பட்டது. விலைமதிப்பற்ற மரங்களை கடத்துவது வனத்துறைக்கு அச்சுறுத்தலாகவும், மாநில அரசுக்கு கவலையாகவும் மாறியது. எனவே, இதற்காக சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
வாச்சாத்தியில் சோதனை நடத்த தயாரான அரசாங்கம்
மே 25, 1992இல், சித்தேரி மலைத்தொடரில் துணை வனப் பாதுகாவலராக எல்.நாதன் பொறுப்பேற்றார். சந்தன மரக் கடத்தலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 1992 ஜூன் 14ஆம் தேதி அப்போதைய தர்மபுரி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை எல்.நாதன் சந்தித்தார். மத்திய புலனாய்வு அமைப்பின்(சிபிஐ) உத்தரவின் படி, வாச்சாத்தியில் சோதனை நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது. ஜூன் 20, 1992 அன்று வாச்சாத்தியில் சோதனை நடத்துவதற்காக பெரும் வனப் பணியாளர்களின் கூட்டத்தை எல்.நாதன் திரட்டினார்.கடத்தப்பட்ட சந்தன மரங்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட சோதனையின் போது, கிராம மக்கள் வன அதிகாரிகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
18 பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த அதிகாரிகள்
இதில் ஒரு வன அதிகாரி பலத்த காயம் அடைந்தார். மேலும் 23 பேர் லேசான காயம் அடைந்தனர். வாச்சாத்தி கிராமத்திற்கு சோதனை செய்ய சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து, அந்த அதிகாரிகளை 3 மணி நேரம் அவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, 269 வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்தில் இறங்கி கண்மூடித்தனமாக வீடுகளை சூறையாடினர். முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அதிகாரிகள் அனைவரையும் சரமாரியாக தாக்கினர். கிராமத்து மக்களின் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விவசாயக் கருவிகள் மொத்தமாக அழிக்கப்பட்டன. 18 பெண்களை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவர்களை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.
நடந்ததை மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள்
அந்த கிராம மக்களால் மதிக்கப்படும் கிராமத் தலைவர், பெண்களின் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும் பெண்கள் அந்த கிராமத் தலைவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டனர். கிராமத்தில் உள்ள கால்நடைகளைக் கூட அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை. அந்த கிராமத்தில் இருந்த கால்நடைகளை அறுத்து, சடலத்தை திறந்த கிணற்றில் அதிகாரிகள் வீசியதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகளைத் தாக்கியதற்காக கிராம மக்கள் மீது உள்ளூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவர்களில் பலரைக் கைது செய்தது. ஆனால், பழங்குடியினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்காக எந்த அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் பி.சண்முகம் 1992 ஜூலை-14அன்று வாச்சாத்திக்கு வரும் வரை பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வரவில்லை.