2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?
ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ம் தேதி அறிவித்திருக்கிறது. ஒரு ரூபாய் நோட்டின் வாழ்நாள் நான்கு முதல் ஐந்து வருடங்கள் மட்டுமே. 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு அதன் வாழ்நாள் முடியும் தருவாயில் இருக்கிறது. 2018-19-ம் ஆண்டிலேயே புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தவிட்டது ரிசர்வ் வங்கி. மேலும், கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பவர்களும் 2000 ரூபாய் நோட்டுக்களையே அச்சடிக்கின்றனர். இது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. மேலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 10.8% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.
பொருளாதாரத்தில் என்ன மாற்றம் ஏற்படும்:
கணக்கில் காட்டப்படாத பணமாகவும், கருப்புப் பணமாக பதுக்கி வைக்கவும் 2000 ரூபாய் நோட்டுக்களே அதிகம் பயன்படுகின்றன. தற்போது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவ்வாறாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை என அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. எனவே, பெரும்பாலான ரூபாய் நோட்டுக்கள் தற்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். இதன் மூலம், வங்கிகளால் புதிய கடன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு ட்ரில்லியன் ரூபாய் மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு வரலாம் என நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.