
புதிய அல்லது பழைய வருமான வரிமுறை.. எதுவென தேர்ந்தெடுங்கள்!
செய்தி முன்னோட்டம்
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு புதிய வருமான வரிமுறையை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நடப்பு நிதியாண்டில் இந்த புதிய வருமான வரிமுறை அமலுக்கு வரும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
புதிய மற்றும் பழைய வருமான வரிமுறை இரண்டுமே அமலில் இருக்கும். வரி செலுத்துபவர்கள் தங்களுக்கு அதிகம் பயன் தரக்கூடிய வருமான வரிமுறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எந்த வருமான வரிமுறை வேண்டும் எனத் தேர்ந்தெடுக்காதவர்களை அடிப்படையாக புதிய வருமான வரிமுறையிலேயே சேர்த்து கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பழைய வருமான வரிமுறை வேண்டும் என்பவர்கள், வருமான வரி செலுத்தும் போது அந்த முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வருமான வரி
புதிய மற்றும் பழைய வருமான வரிமுறை:
புதிய வருமான வரிமுறையின் கீழ் ரூ.7 லட்சம் ஆண்டு வருவாய் இருந்தால் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், ரூ.7 லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து வருமான வரி செலுத்த வேண்டும்.
இதுவே பழைய வருமான வரிமுறையில் வருமான வரி விலக்கின் உச்சவரம்பு ரூ.5 லட்சமாகவும், 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரூ.2.5 லட்சத்தில் இருந்தும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய வருமான வரிமுறையில் வரி விலக்கு மற்றும் வரிச்சலுகைகள் எதுவும் இல்லை.
ஆனால், பழைய வருமான வரிமுறையில் மருத்துவக் காப்பீடு, வீட்டுக் கடன், முதலீடுகள் ஆகியவற்றுக்கு வருமான வரிச் சலுகைகளும், விலக்குகளும் உண்டு.
உங்களுக்கு எந்த வருமான வரிமுறை சரியானது என்பதைக் கணக்கிட்டுத் தேர்ந்தெடுங்கள்.