கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. தற்போது ரூ.400 கோடி வருவாய் ஈட்டி வரும் கோவை பழமுதிர் நிலையமானது லாபகரமான நிறுவனமாகவே இயங்கி வருகிறது. இதனை ரூ.800 கோடி மதிப்பீட்டில், 70% பங்குகளை ரூ.550-600 கோடிக்கு கைப்பற்றியிருக்கிறது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல். இந்த நிறுவனத்தின் மீதம் உள்ள 30% பங்குகள் புரமோட்டர்களிடமே இருக்கும் என்றும், தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள செந்தில் நடராஜன் அப்படியே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னணி விற்பனையாளராக இருக்கும் இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை பழமுதிர் நிலையம்:
கோவை பழமுதிர் நிலையத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராக உள்ள செந்திலின் தந்தையான நடாராஜன் மற்றும் அவரது சகோதரரால் 1965-ல் கோயம்புத்தூரில் ரூ.300 முதலீட்டில் சிறிய கடையாக தொடங்கப்பட்டது பழமுதிர் நிலையம். எந்த கலப்படமும் இல்லாமல் விற்கப்பட்ட பழச்சாறால் இவர்களது கடையின் பழங்களானது பிரபலமடையத் தொடங்கியது. 2012-ல் அதிகாரப்பூர்வமாக கோவை பழமுதிர் நிலையம் நிறுவனமாக்கப்பட்டது. 60% பங்குகள் நிறுவனத்துடனும், 40% பங்குகள் பங்குதாரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 2022-ல் கிட்டத்தட்ட 25 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல்ஸ் நிறுவனம். ஆனால், மாறிவரும் பொருளாதார நிலை காரணமாக தங்களுடைய முதலீடுகளைக் குறைத்துக் கொண்டே வந்தது. ஆனால், இந்த வருடம் முதல்முறையாக கோவை பழமுதிர் நிலையத்தில் அந்நிறுவனம் பங்குகளை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.