மேற்கு வங்கத்தில் நாளை மீண்டும் வாக்குப்பதிவு: EVM தில்லுமுல்லு புகாரால் தேர்தல் ஆணையம் அதிரடி
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு மற்றும் சாவடி ஆக்கிரமிப்பு போன்ற தீவிரப் புகார்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, குறிப்பிட்ட 15 வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். ஃபால்டா தொகுதியில் உள்ள மேலும் 30 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இறுதி அறிக்கைக்கு பிறகு தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுள்ளது.
விவகாரம்
வாக்கு இயந்திரங்களில் டேப் ஒட்டிய விவகாரம்
கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, டயமண்ட் ஹார்பர் பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. ஃபால்டா தொகுதியில் பாஜக மற்றும் சிபிஎம் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கு நேரே இருந்த வாக்குப்பதிவு பொத்தான்களை மறைத்து மர்ம நபர்கள் டேப் ஒட்டியதாக பாஜக குற்றம் சாட்டியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால், வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 58(2)-இன் கீழ், தேர்தல் நேர்மையை பாதிக்கும் இத்தகைய முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால் அங்கு நடைபெற்ற முந்தைய வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு
சாதனை படைத்த வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தலில் பல்வேறு அரசியல் மோதல்களும் முறைகேடு புகார்களும் எழுந்த போதிலும், மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்களின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 92.47 சதவீதத்தை எட்டியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 93.19% வாக்குகளும், ஏப்ரல் 29 அன்று நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 92.67% வாக்குகளும் பதிவாகியுள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு மற்றும் 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையைப் பின்பற்றுவதாக மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் உறுதியளித்துள்ளார்.