கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்
செய்தி முன்னோட்டம்
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், தமிழ்நாடு முழுவதும் அதன் தாக்கம் இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளின் நீர்நிலைகளில் வறட்சி காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தினாலும், நீர்மட்டம் குறைந்த அளவில் காணப்படுவதாலும் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரின் மொத்த குடிநீர் தேவை, தாமிரபரணி நதி தண்ணீரின் மூலமே கிடைத்துவருகிறது.
திருநெல்வேலி நகரத்தை பொறுத்தவரை, தற்போது தாமிரபரணி ஆற்றிலிருந்து, சுத்தமல்லி, கொண்டாநகரம் என மொத்தம் 12 இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களின் வழியாகவும், 46 உறைகிணறுகளின் மூலமும், குடிநீர் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பின்னர் நீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
Water scarcity
திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாடு
இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தாமிரபரணி ஆற்றிலிருந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் முழுவதற்கும் குடிநீர் விநியோகத்திற்காக, 400 உறைகிணறுகள் செயல்பாட்டில் உள்ளன.
தற்போது ஒரு மாதமாக குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால், நீரேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "நீர் மட்டம் சரிந்துவிட்ட நிலையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் குடிநீர் தேவை, ஜூன் இறுதி வரை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தனர்.
"மேலும், மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை அதிகம் லாரிகள் மூலம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
ஆழ்துளை குழாய்கள் மூலம், தண்ணீரை சேகரித்து, வாரத்தில் இரண்டு நாட்கள் வீடுகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இதற்கிடையில் கேன்களில் விற்கப்படும் குடிநீரின் விற்பனை அதிகரித்துள்ளது.