மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி இருப்பதாவது:
இது குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. டெல்லி காவல்துறையின் விசாரணை முடிவடையும் வரை விளையாட்டு வீரர்கள் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து FIR(முதல் தகவல் அறிக்கை) தாக்கல் செய்துள்ளது. விசாரணை முடியும் வரை, விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அரசியல் செய்வதற்கு இது மேடை அல்ல என்று விளையாட்டு வீரர்களே முதலில் கூறியிருந்தனர். ஆனால், அதற்கு பிறகு அரசியல் கட்சிகள் அங்கு வந்து சென்று கொண்டிருந்தது. போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் கோல்-போஸ்ட்களை' மாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்று அவர் கூறியுள்ளார்.