சத்தீஸ்கர் முதல்வர் ஆகிறார் பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய்
செய்தி முன்னோட்டம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக விஷ்ணு தியோ சாயை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அம்மாநிலத்தின் முதல்வராக யார் பதவியேற்பார் என்ற சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் 54 எம்எல்ஏக்களின் முக்கிய கூட்டம் இன்று ராய்பூரில் நடைபெற்றது.
இதனையடுத்து, இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தலைவர்கள் அருண் சாவோ மற்றும் விஜய் சர்மா ஆகியோர் புதிய துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2003 முதல் 2018 வரை மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ராமன் சிங், சத்தீஸ்கர் சட்டசபையின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தக்ஜகிவ்
யாரிந்த விஷ்ணு தியோ சாய்?
சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் பாஜக போட்டியிட்டது.
மேலும், இந்த தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் 54 இடங்களை கைப்பற்றி பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அப்போது, குங்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய் மொத்தம் 87,604 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான தியோ சாய், முதல் மோடி அமைச்சரவையில் மத்திய எஃகுத்துறை இணை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும், 16வது மக்களவையில் சத்தீஸ்கரின் ராய்கர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 முதல் 2022 வரை சத்தீஸ்கர் பாஜக பொது செயலாளராக இருந்த இவர், ஒரு முக்கிய பழங்குடியின தலைவர் ஆவார்.