பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி, நாகப்பட்டு, தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, நெல்வாய் ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமன்றி குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளது. இதனையடுத்து, தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான தங்களது விளைநிலங்களும் பாதிப்படைவதால் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். கிராம சபை கூட்டங்களிலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பல பேரணிகளை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தமிழக பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலராக உயர்த்த விமான நிலையம் கட்டாயம் தேவை-தமிழக அரசு அறிக்கை
இந்நிலையில் 150வது நாளாக தொடரும் போராட்டத்தில் இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி, தலையில் துணி போட்டுக்கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியப்படி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே, முன்னதாக கிராம மக்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு, "தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டுமானால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம்" என அறிக்கை வெளியிட்டதோடு, தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி கழகமானது, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான சர்வேதேச டெண்டரை அறிவித்துள்ளது குறிப்பிடவேண்டியவை.