LOADING...
பெரம்பூரில் விஜய்க்கு க்ரீன் சிக்னல்! ஆதவ் அர்ஜுனாவுக்கு செக்?
அரசியல் களத்தில் முக்கியமான இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன

பெரம்பூரில் விஜய்க்கு க்ரீன் சிக்னல்! ஆதவ் அர்ஜுனாவுக்கு செக்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2026
12:35 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு பரிசீலனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களத்தில் முக்கியமான இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் TVK பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் வேட்புமனுக்கள் குறித்த செய்திகள் பேசுபொருளாகியுள்ளன. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று வேட்புமனுக்கள் மீதான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பல முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், சில சுயேச்சை மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் முறையான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னரே, ஒவ்வொரு தொகுதியிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

விஜய்

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் மனு ஏற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக அவரது வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், திருச்சி வேட்பு மனுவிற்கு பெரம்பூர் வேட்புமனுவிற்கும் முரண்பாடுகள் இருப்பதாகவும் செய்தி வெளியாயின. அதனால் அவரின் பெரம்பூர் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, அவரது மனுவில் எவ்விதக் குறைபாடுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் விஜய்யின் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய் நேரடியாகக் களம் இறங்குவது அந்தத் தொகுதியை நட்சத்திரத் தொகுதியாக மாற்றியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

மறுபுறம், TVK-வின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரது வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலர் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இது TVK தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின், இவரது மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது மாலைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement