
வீக்கெண்டில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? நாகையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஏன் சனிக்கிழமை மட்டும் மேற்கொள்கிறார் என்பது குறித்து விளக்கமளித்தார். மக்கள் சந்திப்புப் பயணத்தை டிசம்பர் 20 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மக்களின் அன்றாட வேலைகளுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த வாரம் திருச்சியில் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய விஜய், இந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார். நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், தனது பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
கட்டுப்பாடுகள்
கட்டுப்பாடுகள் குறித்து விமர்சனம்
விஜய் மேலும் பேசுகையில், "நான் பேசுவதே மூன்று நிமிடம்தான், அதற்கும் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அரியலூரில் மின்வெட்டு ஏற்பட்டது, திருச்சியில் மைக்கின் வயர் துண்டிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் அல்லது பிரதமர் மோடி வந்தால் இதேபோன்ற தடைகளை விதிப்பீர்களா?." என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், "மிரட்டிப் பார்க்கிறீர்களா, அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை" என்று நேரடியாக முதல்வர் ஸ்டாலினை நோக்கி சவால் விடுத்தார். தான் சொந்த உழைப்பில் சம்பாதித்தவன் என்றும், மக்களின் குறைகளைக் கேட்கக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பிய விஜய், தனது பிரச்சாரத்திற்கு நெருக்கடியான இடங்களில் அனுமதி வழங்கப்படுவது, மக்கள் தன்னை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.