கடன் மோசடி: வீடியோகான் CEO வேணுகோபால் கைது!
ரூ.3250 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் வீடியோகான் CEO வேணுகோபால் தூத்(71) கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் ICICI வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் ஆகியோர் நிதி முறைகேடு காரணமாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டில் ICICI வங்கியின் CEOவாக இருந்த சந்தா கோச்சார் முறைகேடான வகையில் வீடியோகான் CEO வேணுகோபாலுக்கு ரூ.3250 கோடி கடன் வழங்கியுள்ளார். இப்படி கடன் வழங்கியதன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் மற்றும் உறவினர்கள் நிதி ஆதாயம் அடைந்துள்ளது 2018ஆம் ஆண்டு தெரியவந்தது. இதனையடுத்து, சந்தா கோச்சார் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சொத்துக்கள் முடக்கம்!
மேலும், 2019ஆம் ஆண்டு இதற்காக அவர்கள் மீது CBI வழக்கு போடப்பட்டது. அதே ஆண்டு, சந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் CEO வேணுகோபால் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் மூலம், முக்கியமான ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இதற்கான விசாரணை கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முக்கிய நபர்களான சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சர் மற்றும் வீடியோகான் CEO வேணுகோபால் ஆகியோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த விசாரணையினால் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சரின் சொத்துகள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.