காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குடும்பம்; குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் மனிதர்கள் இறந்த பிறகு செய்யும் முழு அளவிலான அடக்கம் நிகழ்ச்சியுடன் தங்களின் 12 வருட காருக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறக்குறைய 1,500 பேர் கலந்து கொண்டனர். மேலும் விழாவின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. லட்சக்கணக்கான செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த பெரும் பிரியாவிடை, குடும்பத்தின் விவசாய நிலத்தில் நடந்தது. இதுதொடர்பாக பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு வேகன் ஆர் கார் மாலைகள் மற்றும் மலர் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் பார்த்துக்கொண்டிருக்க வாகனம் மெதுவாக 15 அடி பள்ளத்தில் தள்ளப்பட்டது. காரின் உரிமையாளர் சஞ்சய் பல்லோரா, விழாவின் பின்னணியில் உள்ள உணர்ச்சிபூர்வமான தொடர்பை விளக்கினார்.
குடும்பத்திற்கு செல்வத்தைக் கொண்டுவந்த ராசியான கார்
சூரத்தில் கட்டுமான தொழிலை நடத்தி வரும் பலோரா, தனது குடும்பத்தின் வெற்றியில் கார் முக்கிய பங்கு வகித்ததாக பகிர்ந்து கொண்டார். "நான் இந்த காரை ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன், அது குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வந்தது. நாங்கள் வணிகத்தில் மகத்தான வெற்றியைக் கண்டோம், மேலும் எங்கள் சமூக நிலை மேம்பட்டது. அதை விற்பதற்குப் பதிலாக, அது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதற்கு சமாதி எழுப்ப முடிவு செய்தோம்." என்று பலோரா கூறினார். பச்சைத் துணியால் காரை அலங்கரித்த பிறகு, பூசாரிகள் மந்திரங்களை உச்சரித்தபடி ரோஜா இதழ்களால் பொழிந்து பாரம்பரிய பூஜை செய்தனர். காரை சுற்றி கர்பாவையும் செய்தனர்.