வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
வேங்கை வயல் பிரச்சனை குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்மென புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு தேசியப் பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பிப்ரவரி 7ஆம் தேதியன்று இதே ஆணையத்திடம் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "மார்ச் 4 ஆம் தேதி தேசியப் பட்டியலின ஆணையத்தினர் வேங்கைவயலுக்கு நேரில் வருவதாக தெரிவித்துள்ளனர்" என்று இளமுருகு கூறி இருந்தார்.
வேங்கை வயலில் நடந்த பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது. மாற்றப்பட்ட இந்த வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக சிபிசிஐடி சமீபத்தில் கூறி இருந்தது. ஆனால், அதன் பிறகு சிபிசிஐடியிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.