ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், இதை கண்டித்து அந்த ஊர் மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் குடிநீர் தொட்டியை உடைக்க முயன்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றவாளிகள் யார் என்பது தெரிந்தும் போலீஸார் கைது செய்யாமல் இருக்கின்றனர் என்றும் போலீசார் மீது புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை இறையூர் ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் என்ற பகுதியில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம்
இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மக்கள் கோபமடைந்துள்ளனர். இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்ட வேங்கைவயல் மக்கள், இதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.