சென்னையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. அதன்படி, தாம்பரம், விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியே திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கையினை வைத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், போதிய ரயில் சேவைகள் போக்குவரத்திற்கு ஏதுவாக வசதிகள் இல்லை. அதனால் இந்த வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்படுமா? என்னும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்
இதனிடையே, இந்த ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. நெல்லை-சென்னை தடத்தில் இயக்கப்படும் இந்த வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மதியம் 2.10க்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிகிறது. அதே போல், மீண்டும் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.