விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலின் அதிவேகம், குளிர்சாதன வசதி, போன்ற சேவைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இதனால் நாடு முழுவதும் இந்த ரயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நிலையில், தற்போது வரை நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ரயில்வேத்துறை அதிகாரிகள் அண்மையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
24 மாநிலங்கள் வந்தே பாரத் ரயில் மூலம் இணைப்பு
அது என்னவென்றால், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 27ம்தேதி மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் மோடி அவர்கள் ஒருசேர 5 வந்தே பாரத் ரயில்களின் சேவையினை துவக்கிவைத்தார். அதன்மூலம், 24 மாநிலங்கள் வந்தே பாரத் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் துவங்கி இந்தாண்டு ஜூன் 21ம்தேதி வரையிலான காலகட்டத்தில் இயங்கிய 2 ஆயிரத்து 140ட்ரிப்களில் வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும், "விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலானது பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்காக பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது" என்றும் தெரிவித்துள்ளார்கள்.