இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1
இந்தியாவில் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வரும் வாடிலால் வணிக நிறுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா? தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த ஐஸ்கிரீம் விற்பனை நிறுவனமாக அறியப்படுவது அருண் ஐஸ்கிரீம் நிறுவனம் தான். அருண் ஐஸ்கிரீம் நிறுவனமானது, 1970-ல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம். ஆனால், அதற்கு முன்னதாக 1900-களிலேயே, அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம், வாடிலால். முதலில் ஒரு சிறிய சோடா விற்கும் கடையாக மட்டுமே துவங்கப்பட்டு, பின்னர் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உருவெடுத்தது வாடிலால். 1907-ல் அகமதாபாத்தில் முதல் சோடா விற்பனைக் கடையைத் தொடங்கினார், வாடிலால் காந்தி. சோடா விற்பனை பெரியளவில் இல்லை. அதன் விற்பனையை உயர்த்த சோடாவை ஐஸ்கிரீமுடன் சேர்த்து விற்பனை செய்யத் துவங்கினார்.
அகமதாபாத்தில் பிரபலமான வாடிலால்:
சோடாவுடன் ஐஸ்கிரீம் என்பது அன்றைய நாளில் மிகவும் புதுமையாக இருக்கவே, மக்கள் பலரும் வாடிலால் கடையைத் தேடி வந்து சோடா ஐஸ்கிரீமை வாங்கி சுவைத்திருக்கிறார்கள். முதலில் 'கொத்தி' என்ற கையால் ஐஸ்கிரீம் செய்யும் முறையைப் பயன்படுத்தியே ஐஸ்கிரீமைத் தயாரித்து வந்திருக்கிறார் வாடிலால் காந்தி. ஐஸ்கிரீம் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கவே, 1926-ல் அகமதாபாத்தில் முதல் ஐஸ்கிரீம் கடையைத் துவக்கியிருக்கிறார் வாடிலால் காந்தியின் மகன், ரன்சோட்லால் காந்தி. அதனைத் தொடர்ந்து ஒரு கடை இரண்டானது, இரண்டு நான்கானது. 1960-களில் அகமதாபாத்தில் மட்டும் பத்து கடைகளைக் கொண்டிருந்திருக்கிறது வாடிலால். பின்னர் வாடிலாலின் பேரன் வியாபாராத்தை விரிவுபடுத்தவும், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் ஆயத்தமாகியிருக்கிறார்.