உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகளை காவு வாங்கியதாக கூறப்படும் மருந்துகளை உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய இருமல் மருந்துகளைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த டிசம்பர் மாதம் அந்நாடு இந்தியாவின் மீது குற்றம் சாட்டி இருந்தது. உ.பி. மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1-Max இருமல் மருந்தே இதற்கு காரணம் என்று கூறப்பட்டதால், இந்திய அரசு இந்த நிறுவனத்தின் நொய்டா கிளைக்கு சீல் வைத்தது. இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்ததாக உஸ்பெகிஸ்தான் கூறி இருந்தது.
FIRஇல் பெயரிடப்பட்டுள்ள மூன்று பேர் கைது
இந்நிலையில், இதை தயாரித்த மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களை நொய்டா காவல்துறையினர் இன்று(மார் 3) கைது செய்துள்ளனர். மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) மருந்துப் பரிசோதகரின் புகாரின் பேரில், மரியான் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் உட்பட, ஐந்து அதிகாரிகள் மீது நேற்று இரவு FIR பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் உத்தரபிரதேச மாநில மருந்து அதிகாரிகள் மரியான் பயோடெக் மருந்துகளின் மாதிரிகளை சோதித்ததில், அதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. FIRஇல் பெயரிடப்பட்டுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் தலைமறைவாக உள்ளனர் என்ற தகவலையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.