அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: போயிங் 787 விமானத்தில் தொடர் மின்சார கோளாறுகள் இருந்ததா?
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 241 பயணிகளின் உயிரை பறித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நீண்ட காலமாக பல தீவிரமான மின்சார மற்றும் மின்னணு கோளாறுகளைக் கொண்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த 'விமானப் பாதுகாப்பு அறக்கட்டளை'(FAS) என்ற அமைப்பு இது குறித்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், "விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் கடந்த 11 ஆண்டுகளாக மின்சாரப் பேனல்களில் தீ விபத்து, சர்க்யூட் கோளாறுகள் மற்றும் கம்ப்யூட்டர் குறைபாடுகள் எனப் பல பிரச்சனைகள் இருந்துள்ளன. இந்தத் தீவிரமான கோளாறுகளால் பலமுறை அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டுள்ளது". இத்தகைய நிலையற்ற மின்சார விநியோகமே விபத்துக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
விசாரணை
விசாரணையில் சுணக்கம்
இந்தத் தகவல்களை இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) மற்றும் அமெரிக்காவின் NTSB அமைப்புகளிடம் வழங்கியும், அவர்கள் இதுவரை முறையான பதிலளிக்கவில்லை என FAS குற்றம் சாட்டியுள்ளது. மேலும், போயிங் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிர்வாகம் இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகளை மறைக்க முயன்றிருக்கலாம் என்றும், இது சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது. குறிப்பிட்ட இந்த VT-ANB விமானம் இந்தியாவுக்கு வந்த நாளிலிருந்தே கோளாறுகளுடன் இருந்ததாகவும், போயிங் 787 ரக விமானங்கள் பொதுவாகப் பாதுகாப்பு வாய்ந்தவை என்றாலும், இந்த குறிப்பிட்ட விமானம் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் இத்தகைய சிக்கல்கள் எழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.