
ஏர் இந்தியா விமான விபத்திற்குக் காரணம் நீர்க் கசிவுதான்? பிளாக் பாக்ஸ் தகவலைக் கோரி அமெரிக்க வழக்கறிஞர் மனு
செய்தி முன்னோட்டம்
ஏர் இந்தியாவின் ஏஐ171 (AI171) விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக வாதாடும் ஒரு மூத்த அமெரிக்க வழக்கறிஞர், பிளாக் பாக்ஸ் என அழைக்கப்படும் விமானத் தரவுப் பதிவு (FDR) தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், விமானியின் தவறு அல்ல, மாறாக ஒரு நீர் கசிவுதான் இந்த விபத்திற்குக் காரணம் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்து இதை அணுகி வருகிறார். கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
விசாரணை அறிக்கை
விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை
விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) ஆரம்ப அறிக்கை, விமானத்தின் இரண்டு என்ஜின்களும் திடீரென செயலிழந்ததாகக் குறிப்பிட்டது. ஆனால், விமானத்தின் குடிநீர் அமைப்பிலிருந்து ஏற்பட்ட கசிவு, மின் சுற்றுகளில் ஒரு பெரிய ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஆண்ட்ரூஸ் இப்போது வாதிடுகிறார். இந்த மின் கோளாறு, தானாகவே என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தி, உந்துவிசையை இழக்கச் செய்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார். ஆண்ட்ரூஸின் இந்த வாதம், அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மே மாதம் வெளியிட்ட எச்சரிக்கையுடன் ஒத்துப்போகிறது. அந்த எச்சரிக்கை, போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் (விபத்தில் சிக்கிய அதே மாடல்) தவறாக நிறுவப்பட்ட நீர் இணைப்புகளால் ஏற்படக்கூடிய நீர் கசிவுகள் குறித்து விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.