மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப் 01) தாக்கல் செய்தார். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11வது ஆண்டு பட்ஜெட்டாகும். மேலும், இது நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட்டாகும். புதிய பட்ஜெட் திட்டமானது தொடர்ச்சியான பொருளாதார சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக பணவீக்கத்திற்கு மத்தியில் சில முக்கிய முடிவுகளை உள்ளடக்கியுள்ளது. 2023 நிதியாண்டில் (FY), இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தோட்டக்கலைத் துறைக்கு 2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கடன் இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான மூலதனச் செலவு 10 லட்சம் கோடி என்பதை நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2023இல் அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்கள்
மூலதன முதலீட்டு செலவு 33% அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் என்றும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ரயில்வேயின் புதிய திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,516 கோடி முதலீட்டில் 63,000 முதன்மை வேளாண் கடன் சங்கங்களைக் கணினிமயமாக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. 13GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பரிமாற்ற அமைப்பு லடாக்கிலிருந்து மாநிலங்களுக்கு இடையே அமைக்கப்படும். இதற்கு ரூ.20,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதிகரிக்கும் வகையில் நாடுமுழுவதும், 157 புதிய நர்சிங் கல்லூரிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான கூடுதல் இந்திய கவுன்சில்(ICMR) ஆய்வகங்கள் அமைக்கப்படும்.