Page Loader
இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்
நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலையின்மை குறைவாக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்

எழுதியவர் Srinath r
Dec 17, 2023
02:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி (PLFS), 2022-23ல் நாட்டிலேயே சத்தீஸ்கரில்(5.6%), மற்றும் டெல்லியில் (5.7%)குறைந்த வேலையின்மை பதிவாகியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்ச வேலையின்மை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்(33%), லடாக்கில்(26.5%), ஆந்திராவில்(24%) பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக ராஜஸ்தானில் 23.1 சதவீதமும், அதற்கு அடுத்தபடியாக ஒரிசாவில் 21.9 சதவீதமும் வேலையின்மை உள்ளது.

2nd card

2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் வேலையின்மை ஆய்வு

வேலையின்மை விகிதம் என்பது, தொழிலாளர் சக்தியில் உள்ள வேலையில்லாத நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவேளையில் தொழிலாளர் தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இந்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. மேற்குறிப்பிட்ட தரவுகள், ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தில் சேகரிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ஜூலை 2017-ஜூன் 2018, ஜூலை 2018-ஜூன் 2019, ஜூலை 2019-ஜூன் 2020, ஜூலை 2020-ஜூன் 2021 மற்றும் ஜூலை 2021-ஜூன் 2022 ஆகிய இடைவேளைகளில் 5 அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, ஆறாவது முறையாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.