Page Loader
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம் 

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 23, 2024
04:11 pm

செய்தி முன்னோட்டம்

பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது. கடந்த ஒரு வாரத்தில் பீகாரில் இடிந்து விழும் மூன்றாவது பாலம் இதுவாகும். மோதிஹாரியில் நடந்த இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். "இந்த விபத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது தீவிரமான விவகாரம். எனவே துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று பீகாரின் ஊரகப் பணித் துறையின் (ஆர்டபிள்யூடி) கூடுதல் தலைமைச் செயலாளர் (ஏசிஎஸ்) தீபக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா 

சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள்

"மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இதற்காக உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். விரிவான தகவல் இனி தான் கிடைக்கும்" என்று சிங் மேலும் கூறியுள்ளார். "அந்த பாலத்தின் சில தூண்களை கட்டுவதற்கு உள்ளூர்வாசிகளில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக எங்களிடம் தகவல்கள் உள்ளன. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்' என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் இது உட்பட மொத்தம் 3 பாலங்கள் பீகாரில் இடிந்து விழுந்துள்ளது. நேற்று பீகார் மாநிலம் சிவான் பகுதியில் திடீரென ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பீகாரின் அராரியாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்குப் முன் நடந்தது.