
உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா-உக்கரைன் இடையே நிலவி வரும் மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இன்று(மார் 2) மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, "உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்க முடியும்" என்று கூறினார்.
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்தே, பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திரம் மூலம் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் எந்தவொரு அமைதியான செயல்முறையிலும் பங்களிக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளது." என்று கூறினார்.
இந்தியா
இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு
பிரதமர் மெலோனியை வரவேற்ற பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இத்தாலி மக்கள் அவருக்கு வாக்களித்து, இத்தாலியின் முதல் பெண் மற்றும் இளைய பிரதமராக அவரை தேர்ந்தெடுத்தனர். இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்தியர்கள் சார்பில் அவரை வாழ்த்துகிறேன்" என்றார்.
8வது ரைசினா உரையாடல்-2023இல் இத்தாலிய பிரதமர் தலைமை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.
இந்த ஆண்டுடன் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவடைகிறது.
"இந்த சந்தர்ப்பத்தில், இந்திய-இத்தாலி கூட்டாண்மைக்கு வியூகக் கூட்டாண்மை அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, விண்வெளி ஆகியவற்றில் இத்தாலியுடனான தனது உறவை இந்தியா மேலும் வலுப்படுத்தும்." என்று பிரதமர் மோடி கூறினார்.