அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவு தவறாக சித்தரிக்கப்படுவதாக அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு முறையாக அரசிடம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. வரவு செலவு கணக்குகளும் வருமான வரித்துறையினரிடம் முறையாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள 36 கோடி 30 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதற்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று கூறியுள்ளார்.
நன்கொடைகள் விவரங்களும் முறையாக தாக்கல்
மேலும் அவர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்தும் கிடையாது. அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கிய 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான ஆவணங்களை கொடுத்து சட்டப்படி மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையானது கடந்த 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளை பதிவானது பதிவு செய்யப்பட்ட நாள் முதல் மருத்துவ உதவிகள், கல்வி போன்ற பல மக்கள் நலப்பணிகள் செய்யப்பட்ட வருகிறது. அறக்கட்டளை மூலம் வந்த நன்கொடைகள் விவரங்களும் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.