சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய தேவையில்லையென உயர் நீதிமன்றம் கருத்து
சனாதனத்திற்கு எதிராக பேசிய வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதோடு, அமைச்சர் பதவியில் இருப்பவர்கள், சனாதனம் குறித்து பேசியிருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்" என்று பேசினார். அதே போன்ற கருத்தை, அமைச்சர் சேகர்பாபு, ஆ.ராசா ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
உயர் நீதிமன்றத்தில் கோ - வாரண்டோ வழக்கு
இது தொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதே போல இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி கோ-வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்றபோதும், மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி, வழக்குகளை முடித்து வைத்தார். அதேநேரத்தில்,"அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம்;அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும். அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது" என வலியுறுத்தியுள்ளார் நீதிபதி.