சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் புதியப்பாலங்கள், சாலைகளை அமைத்தல், அதனை பராமரித்தல், கிராமப்புறங்களில் இணைப்பு சாலைகளை அமைத்தல் போன்ற முக்கியமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. இந்த துறை மூலமே தமிழக அரசு தரமான, பாதுகாப்பான சாலை கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல்-பார்க் சந்திப்பு என்னும் இவ்இரண்டு போக்குவரத்து சமிக்ஞைகளில் வாகனங்கள் சுமார் 20-30நிமிடங்கள் காத்திருந்து செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இப்பகுதிகளில் U-வடிவ மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த இரண்டு சந்திப்புகளில் U-வடிவ மேம்பாலங்கள் அமைத்தலோடு ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ரூ.108.13 கோடி மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடவேண்டியவை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அந்த அறிவிப்பின் படி தற்போது ரூ.18.15 கோடி மதிப்பில் இந்திரா நகரில் முதல் U-வடிவ மேம்பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,23)இந்த மேம்பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார். 237மீ நீளமுள்ள இப்பாலம் 12.5மீ.,நீளம் கொண்ட 19 கண்களை கொண்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையின் வலதுபக்கம் இப்பாலத்தின் ஏறு சாய்தளமானது 120மீ நீளத்துக்கும், இடதுப்பக்கம் இறங்கு சாய்தளம் 120மீ.,நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சோழிங்கநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்திரா நகர் U-வடிவ மேம்பாலம் மீது ஏறி திரும்பி, இந்திரா நகர் வழியே அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்லலாம் என்று தெரிகிறது.